டில்லி,

டில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக, கார்கள் மற்றும் குறிப்பிட்ட வாகனங்கள் இயக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில்,  மாநில அரசு பேருந்துகளை கட்டணமில்லாமல் இலவசமாக பயன்படுத்தலாம் என டில்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க இருப்பதாகவும், அந்த நேரத்தில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக டில்லியில் கடும் காற்று மாசு காணப்படுகிறது. இதன் காரணமாக சுகாதாரக் கேடும், வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

பரிசோதனையின்போது, காற்று மாசு தரக் குறியீடு (ஏக்யூஐ) 474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக புகை சூழ்ந்துள்ள நிலையில், 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில், நவம்பர் 13 முதல் 17-ம் தேதி வரை ஐந்து நாட்கள் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கபட உள்ளது.

அதன்படி ஒன்றை இலக்க தேதிகளில் ஒன்றை இலக்க எண் கொண்ட கார்கள் இயக்கவும், இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்களும் இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டில்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் டுவிட்டரில் பதவிட்டுள்ளதாவது,

”டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நவம்பர் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் ஐந்து நாட்கள் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் அந்த 5 நாட்களும் டெல்லியில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்” எனக் கூறியுள்ளார்.