டில்லி:
சாதி, மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக்கூடாது, அப்படி வாக்கு சேகரிப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் உள்பட பல மாநிலங்களில் இடைத்தேர்தல் மற்றும் அரியானா, மத்திய பிரதேச மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷீல் சந்திரா ஆகியோர் சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், சாதிகளின் பெயரையோ மத நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தியோ வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தேர்தலின்போது, ஒருதலைபட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்த சுனில் அரோரா, தேர்தல் செலவுகளுக்கான உச்ச வரம்பை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும், மாற்றுத் திறனாளி வாக்காளர்களைக் கண்டறிய அரியானா அரசு உதவியதாகத் தெரிவித்த அவர், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவ பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.