போபால்

க்களவை தேர்தலில் போபாலில் பாஜக சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்ஞா தாகுருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்ப உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்ஞா தாகுரை தீவிரவாத தடுப்பு படை அதிகாரி ஹேமந்த் கர்கரே கைது செய்தார். சுமார் 8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமினில் வெளியில் உள்ளார். அவரை பாஜக தனது போபால் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது.

சாத்வி பிரக்ஞாவை கைது செய்த அதிகாரி ஹேமந்த் கர்கரே மும்பையில் நடந்த 26/11 தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். நேற்று முன் தினம் ஒரு நிகழ்வில் சாத்வி பிரக்ஞா தாகுர் தாம் சிறையில் மிகவும் கொடுமை படுத்தப் பட்டதாகவும் தனது சாபத்தினால் ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பலரும் கடுமெதிர்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் போபால் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுதம் காடே, “நாங்கள் இந்த விவகாரத்தை சுயமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இது குறித்து துணை தேர்தல் அதிகாரியிடம் விவரங்களை கேட்டோம். இன்று காலை அந்த விவரங்கள் கிடைத்தன. நாங்கள் இது குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க கோரி சாத்வி பிரக்ஞா தாகுர் மற்றும் அவரது நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஆகிய இருவருக்கும் நோட்டிஸ் அனுப்ப உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

”தற்போது மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி ஜாமீனில் வந்துள்ளார்.   அந்த வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் சாத்வி தம்மை கைது செய்த அதிகாரி மீது அவதூறு பரப்பியது அவருடைய ஜாமீன் விதி முறைகளுக்கும் எதிரானது.   எனவே அவர் விளக்கம் திருப்திகரமாக இல்லை எனில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளன” என மற்றொரு தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.