டெல்லி: வார்த்தைகளில் கவனமாக இருங்கள்  என காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.

ராகுல்காந்தி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது, மோடி என்ற பெயருள்ளவர்கள் திருடன் என்று கூறியதும், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் எ‌ன கூறிவிட்டது என பேசிய நிலையில், அதுதொடர்பான வழக்கில் அவரை கடுமையாக நீதிமன்றம் சாடியதால், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், தற்போது  பாஜக தலைவர்களை பிக்பாக்கெட் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற  காங்கிரஸ்  பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க தலைவர்களை ‘பிக்பாக்கெட்’ எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில், ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராகுல் காந்தி அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ராகுல்காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  பொது இடங்களில் பேசும்போது, பிக்பாக்கெட் போன்ற அநாகரிக சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், அதிக கவனத்துடன் பேச வேண்டுமெனவும், பொது இடங்களில் மக்கள் மத்தியில் பேசும்போது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைகளை  வழங்கியுள்ளது.