கொல்கத்தா

வாக்காளர்களுக்கு இலவச அயோத்தி பயண வாக்குறுதி அளித்த மேற்கு வங்க மாநில பாஜக வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  வரும் மே 2 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாக உள்ளன.  இந்த மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.  அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன.

இம்மாநிலத்தில் உள்ள பந்தபேஸ்வர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் ஜிதேந்திர திவாரி என்பவர் போட்டியிடுகிறார்.  இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தாம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களை இலவசமாக அயோத்திக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.   இது போல் இரு முறை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மார்ச் 22 ஆம் தேதி அன்று திருணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இத்தகைய வாக்குறுதிகள் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் எனத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   தேர்தல் ஆணையம் இதற்கான விளக்கம் கோரி ஜிதேந்திர திவாரிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

ஜிதேந்திர திவாரி தமக்கு இத்தகைய வாக்குறுதிகள் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியவை எனத் தெரியாது எனப் பதில் அளித்துள்ளார்.  மேலும் தமது அறியாமைக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.