டில்லி
தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
பாஜக தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுடன் அந்தந்த மாநிலத் தேர்தல்களும் நடத்த வேண்டும் என்பதாகும். இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க நேரிடும்.
இதையொட்டி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆயினும் பாஜக தனது ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, “தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் தற்போதைய அரசியல் சாசனத்தின்படி அது சாத்தியம் இல்லை. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.