டெல்லி

தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது குறித்த் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட மாட்டாது என்பது குறித்த் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கின.  இது குறித்து திமுக தமிழக தேர்தல் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வழிமுறையில்.

* தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 54 ஏ பிரிவின் கீழ், முதலில் தேர்தல் நடத்தும் அலுவலரின் மேஜையில் தபால் வாக்குச் சீட்டுகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.

* எண்ணும் பணி தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்தல் அலுவலரால் பெறப்பட்ட தபால் ஓட்டுகள் மட்டுமே எண்ணுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

* தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட வேண்டும்.

* குறிப்பிட்ட தொகுதியில் தபால் வாக்குகள் இல்லை என்றால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்கலாம்.

* வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மட்டுமே வாக்குகளை எண்ணுவதற்கு படிவம் 17சி உடன் தேவை.

* மின்னணு எந்திரங்களின் கட்டுப்பாட்டு அலகுகளின் முடிவை கண்டறிவதற்கு முன், எண்ணும் அதிகாரிகள் அவற்றில் உள்ள காகித முத்திரை அப்படியே இருப்பதையும், மொத்த வாக்குகள் படிவம் 17சி-யில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கணக்கிடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

* கட்டுப்பாட்டு அலகின் முடிவு, வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் எண்ணும் முகவர்களுக்குக் காட்டிய பிறகு, படிவம் 17சி-யின் பகுதி-II இல் குறிப்பிடப்படும்.

* கட்டுப்பாட்டு அலகின், திரையில் முடிவுகள் காட்டப்படாவிட்டால், அந்தந்த வி.வி.பேட் எந்திரத்தில் பதிவானசீட்டுகள் அனைத்து கட்டுப்பாட்டு அலகுகளின் எண்ணிக்கையும் முடிந்த பிறகு கணக்கிடப்படும்.

* ஒவ்வொரு கட்டுப்பாட்டு அலகின் வேட்பாளர் வாரியான முடிவும் படிவம் 17சியின் பகுதி II இல் குறிப்பிடப்பட்டு, எண்ணும் மேசையில் இருக்கும் வேட்பாளர்களின் எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் எண்ணும் முகவர்களால் கையொப்பமிடப்படும்.

* ஒவ்வொரு வாக்குச்சாவடியின் படிவம் 17சி படிவம் 20 இல் இறுதி முடிவு தாளை தொகுக்கும் அதிகாரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

* மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகுகளின் வாக்குகளை எண்ணி முடித்த பின்னரே வி.வி.பேட் சீட்டுகளை எண்ணும் பணி தொடங்கும்.

* ஒரு சட்டமன்றத் தொகுதி/ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஒவ்வொரு சட்டமன்றப் பிரிவுக்கும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடிகளின் வி.வி.பேட் சீட்டுகளின் கட்டாயச் சரிபார்ப்பு வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே மேற்கொள்ளப்படும்.

* நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையை விட வெற்றியின் வித்தியாசம் குறைவாக இருந்தால், அத்தகைய நிராகரிக்கப்பட்ட அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன் கட்டாயமாக மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும்.

* இரண்டு வேட்பாளர்களும் சம எண்ணிக்கையிலான அதிக வாக்குகளைப் பெற்றால், குலுக்கல் முறை மூலம் முடிவு அறிவிக்கப்படும்.”

என்று கூறப்பட்டுள்ளது.