சென்னை
நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களில் 12,838 உறுப்பினர்களைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வழக்கமான வாக்குப்பதிவும் கொரோனா நோயாளிகளுக்கு மாலை 5 முதல் 6 மணி வரையும் நடைபெற உள்ளது.
வாக்காளர்கள் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் நோட்டா என்னும் பெயரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பொத்தான் பொருத்தப்பட்டிருக்கும். இதைப் போல் வாக்கு ஒப்புகை இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த உடன் அவர்கள் வாக்களித்த சின்னம் மற்றும் பெயர் சில நொடிகள் ஒளிரும்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவுக்கு யாரும் வாக்களிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு ஒப்புகை இயந்திரமும் இந்த தேர்தலில் பயன்படுத்த மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது/
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளில் இவை சேர்க்கப்படவில்லை. இதை மாநில அரசுகள் திருத்தம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல்கள் முடிந்த பிறகே இதை அரசு செய்ய முடியும்” என அறிவித்துள்ளது.