டெல்லி: துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 60% பகுதி நிலநடுக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. இதை நாடாளுமன்றத்தில் த்திய சுற்றுச்சூழல், மற்றும் புவி அறிவியலுக்கான மத்திய இணை அமைச்சரின் (சுயாதீனப் பொறுப்பு) தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவின் நிலப்பரப்பில் 60% (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) வெவ்வேறு அதிர்வு தீவிரங்களின் பூகம்பங்களுக்கு ஆளாகிறது என ஆய்வுகள் தெரிவித்ததுடன், இந்த நிலநடுக்கமானது மக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டால் ஏராளமான உயிர்சேதம் மற்றும் காயங்கள் மற்றும் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், துருக்கியில் நிகழ்ந்துள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பேரழிவுத் தொடர்ந்து, இந்தியாவிலும் 8 மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியில் கடந்த 3 நாளில் 6முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுமார் 200 முறை அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பாதிப்பு பல நாடுகளுக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவிலும் நிலநடுக்கம் தொடர்பான ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.
இதில், இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் என 8 மாநிலங்களில் உள்ள பகுதிகள் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதாகவும் அப்பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியாவைப் பொருத்தவரை எந்த நேரமும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்குவதற்கான அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இமயமலை மலைத்தொடர்கள் ஐரோப்பியப் புவியியல் தடங்களுடன் பின்னி உருவானது. எந்த நேரமும் நகரும் தட்டுக்கள் அதன் அடியில் இருப்பதினால், நிலநடுக்க ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது கடலடி இடப்பெயர்ச்சி மற்றும் நீருக்கடியில் எரிமலைகள் பூமியின் மேற்பரப்பின் சமநிலையை சீர்குலைக்கும் என்றும், இதனால், லத்தூர் மற்றும் உஸ்மானாபாத் (மகாராஷ்டிரா) அருகே பீமா (கிருஷ்ணா) நதியின் பிழைக் கோட்டில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில், அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் கட்டுமானத்திற்கான விஞ்ஞானமற்ற நிலப் பயன்பாடு ஆகியவை இந்தியாவை பூகம்பங்களுக்கு அதிக ஆபத்துள்ள நிலமாக மாற்றுகின்றன என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், கடந்த 150 வருடங்களில் 1897 இல் சில்லாங்கிலும், 1905இல் கங்கார பகுதி, 1934 இல் பீகார்- நேபால் இடையே மற்றும் 1950 இல் அசாமில் நான்கு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு 2001 இல் ஏற்பட்ட குஜராத் பூஜ் நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் இறந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் காயமடைந்தனர்.
இதற்கிடையில், துருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித்த ப்ரான்க் ஹூகர்பீட்ஸ் என்பவரும், இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார். அவரத கணிப்பின்படி, பெரும் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் என்பது நிலம் நடுங்குவதுதான். அதாவது ஏதாவத ஒரு இடத்தில் பூமி அசையும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. இது இயற்கையாக நடக்கும். ஆற்றலை வெளியிடுவதன் விளைவாக இது நிகழ்கிறது, இது அலைகளை எல்லா திசைகளிலும் நகர்த்துகிறது. ஒரு பூகம்பம் ஏற்படும் போது, பூமி அதிர்வுறும், நில அதிர்வு அலைகளை உருவாக்குகிறது, அவை நில அதிர்வு வரைபடங்கள் மூலம் கண்டறியப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும், பூமியில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்படுகிறது. மறுபுறம், விரிவான அழிவை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த நடுக்கம் குறைவாகவே உள்ளது. தட்டு எல்லைகளைச் சுற்றி, குறிப்பாக ஒன்றிணைந்த எல்லைகளில், பூகம்பங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்திய தட்டு மற்றும் யூரேசியன் தட்டு மோதும் இந்தியாவின் பகுதியில் அதிக நிலநடுக்கம் ஏற்படுகிறது. உதாரணமாக, இமயமலைப் பகுதி.
இந்தியாவின் தீபகற்ப பகுதி ஒரு நிலையான பகுதியாக கருதப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில், சிறிய தட்டுகளின் விளிம்புகளில் பூகம்பங்கள் உணரப்படுகின்றன. 1967கொய்னா பூகம்பம் மற்றும் 1993 லத்தூர் நிலநடுக்கம் ஆகியவை தீபகற்ப பகுதிகளில் ஏற்பட்ட பூகம்பங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்.
இந்திய நில அதிர்வியலாளர்கள் இந்தியாவை நான்கு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்: மண்டலம் II, மண்டலம் III, மண்டலம் IV மற்றும் மண்டலம் V. V மற்றும் IV மண்டலங்கள் முழு இமயமலைப் பகுதிக்கும், வடகிழக்கு இந்தியா, மேற்கு மற்றும் வடக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத்தின் பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தீபகற்பப் பகுதியின் குறிப்பிடத்தக்க பகுதி குறைந்த ஆபத்து மண்டலத்தில் உள்ளது, அதே நேரத்தில் வடக்கு தாழ்நிலங்கள் மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகள் மிதமான அபாய மண்டலத்தில் தொடர்ந்து உள்ளன என ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர்.