காட்மாண்டு: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் காணப்படுகிறனர்.

நேபாளம்  நாட்டில், இன்று (ஜன. 7) காலை 6.30 மணியளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது.  தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் அதன் அதிர்வுகள் தென்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்தது. இதன் எதிரொலியாக இந்தியாவில், பிகார் மற்றும் வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் நில அதிர்வு காணப்பட்டது. நேபாளம் நாட்டின் லோபுச்சேவின் வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும்,   சீனாவின் திபெத் பகுதிக்குள்பட்ட பகுதியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக  கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின்  அதிா்வுகள் காத்மாண்டு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இந்தியாவில் டெல்லி,  பீகார் மற்றும் வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.