வாஷிங்டன்: பூமி சுழலும் வேகம் அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.  50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பூமி தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக வின்னியர் ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி வேகமாக சுழன்றதாகவும்,  அப்போது, ஆண்டு 420 நாட்கள் இருந்ததாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கள் தெரிவிக்கின்றன. பின்னர் அதன் வேகம் குறைந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதனை வினாடிகளில் சொல்வதென்றால் 86400 வினாடிகள். இதையடுத்தே, ஆண்டுக்கு 365 நாட்கள் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், துல்லியமாக கணக்கிடும் வகையில்,  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒரு நாளை சேர்த்து லீப் ஆண்டு என கணக்கிடப்பட்டு வருகிறது. 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை லீப் விநாடிகள் சேர்க்கப்பட்டு, பூமியின் சுழற்சியில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணுக் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர்.

ஆனால், தற்போது பூமி சுழலும் வேகம்  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் வைபர்லி கூறுகையில், சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தால், நாம் ஒரு வினாடியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.