டில்லி

ந்திய அரசால் தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுக்களை விற்க மாட்டோம் என இணைய விற்பனை நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

வழக்கமான  சிகரெட்டுக்களுக்கு மாற்றாக இ சிகரெட்டுகள் என அழைக்கப்படும்  மின் சிகரெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது.    இந்த சிகரெட்டுக்களை புகைப்பதன் மூலம் வழக்கமான புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் எனப் பலரும் கூறி வந்தனர்.   ஆனால் இந்த  மின் சிகரெட்டுகளிலும் நிகோடின் உள்ளதால் இதுவும் உடல்நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.

எனவே இந்திய அரசு இந்த  மின் சிகரெட்டுகளை உற்பத்தி செய்ய, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய மற்றும் விளம்பரம் செய்யத் தடை விதித்தது.   இந்த தடையை  மீறுவோருக்கு முதல் முறை ஒரு வருடச் சிறை தண்டனை, ரூ;1 லட்சம் அபராதம் அல்லது இரண்டு தண்டனையும்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து குற்றம் செய்வோருக்கு மூன்று வருடச் சிறைத் தண்டனை, மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.    அத்துடன்  இந்த மின் சிகரெட்டுக்களை இருப்பில்  வைத்திருப்போருக்கு ரூ. 50000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் கள்ளச்சந்தையில் இந்த மின் சிகரெட்டுகள் தாராளமாகக் கிடைத்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த மின் சிகரெட்டுக்கள் இணையம் மூலம் அதிக அளவில் விற்பனை ஆகி வருகின்றன.   இந்தியாவின் தடை விதிக்கப்பட்டதால்  இணைய விற்பனை நிறுவனங்கள் தங்கள் தளத்தின் மூலம் மின் சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளனர்.   இணைய விற்பனை தளங்களில் முதல் இடத்தை பிடித்துள்ள அமேசான் நிறுவனம் இந்த தகவலை அளித்துள்ளது.