ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னணு ஏலம் மூலம் ஒரு மதுக்கடை ரூ .510 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் கலால் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, மதுக்கடைகள் அனைத்தும் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டது. கிட்டத்தட்ட 7000க்கும் அதிகமான கடைகள் மின்னணு ஏலம் மூலம் கடந்த 3 நாட்களாக ஏலம் விடப்பட்டு வருகின்றன.
அதன்படி மதுக்கடைகளின் ஏலம், அடிப்படை விலையில் இருந்து சராசரியாக 30 சதவிதிகம் உயர்வை அடைந்து வரும் நிலையில், ஒரே அடியாக யாரும் எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஒரு கடை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஹனுமன்கர் மாவட்டத்தின் நோஹாரில் உள்ள ஒரு மதுக்கடையின் அடிப்படை விலை 72 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையின் காலை 11 மணிக்கு ஏலம் தொடங்கியது. நள்ளிரவு தான் ஏலம் முடிந்தது. அதன்படி இந்த கடை 510 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
கடையை நோஹாரை சேர்ந்த கிரண் கன்வார் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். அடிப்படை விலையை விட 708 மடங்கு அதிக விலை கொடுத்து கடையை ஏலம் எடுத்திருக்கிறார்.
இது குறித்து அதிகாரிகள் கூறி இருப்பதாவது: விதிகள் படி அடுத்த 3 நாட்களுக்குள் ஏலத்தொகையில் 2 சதவீதத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஏலம் ரத்தாகிவிடும். நோஹாரை போன்று கரு மாவட்டத்தில் ஒரு மதுக்கடை 11 கோடி ரூபாய்க்கும், ஜெய்ப்பூரின் சங்கனேரில் உள்ள மற்றொரு கடை மின் ஏலம் மூலம் 8.91 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.