பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஏலத்தில் விட அறிவித்துள்ளது.

2019ம் முதல் இ-ஆக்சன் எனும் இணையதள ஏலம் மூலம் இந்த பொருட்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி மோடி பிறந்த நாளன்று தொடங்கிய இந்த ஏலம் அக்டோபர் 2ம் தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், சிலைகள் மற்றும் ஏராளமான கலைபொருட்கள் என 600க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பொருட்களில், பாரா ஒலிம்பிக் வீரர்கள் அஜித் சிங் வழங்கிய ஸ்போர்ட்ஸ் காலணிகள், நித்யஸ்ரீ சிவன் மற்றும் சுகந்த் கடம் வழங்கிய பாட்மிண்டன் பேட் மற்றும் யோகேஷ் கட்டுனியாவின் டிஸ்கஸ் ஆகிய குறிப்பிடத்தகுந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

600 ரூபாய் தொடங்கி ரூ. 8.26 லட்சம் வரை மதிப்பிடப்பட்ட இந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1.5 கோடி என அரசு குழு மதிப்பிட்டுள்ளது.

ஒரு சில பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை வாங்க யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த ஏல விற்பனைக்கான தேதி அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலின் மாதிரி, வெள்ளியிலான வீணை தவிர, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட அந்தந்த மாநில பாரம்பரிய அங்கவஸ்திரம் மற்றும் தலைப்பாகைகளுக்கும் கடைவிரித்தும் கொள்வாரில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த பரிசுப் பொருட்களை வாங்குவதற்கான ஆர்வமும் மவுசும் ஆண்டுக்கு ஆண்டு மக்களிடையே குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது.