கொலை செய்ததை ஒப்புக்கொண்டு கோஷம் எழுப்பிய கம்யூனிஸ்ட்கள்..
கேரளாவில் அரசியல் கொலைகள் சர்வ சாதாரணமான விஷயம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு கண்ணனூர் பகுதியில் முஸ்லிம் லீக் இளைஞர் அரியில் சுகோர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜெயராஜன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
’சுகோர் கொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த நிமிடம் வரை மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ’’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பது போல், கம்யூனிஸ்ட் கட்சியினர் ‘’நாங்கள் தான் சுகோரை கொலை செய்தோம்’ என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் , கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மலப்புரம் பகுதியில் காங்கிரசாரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
அந்த ஊர்வலத்தில் ‘’ சுகோரை கொன்று ,அவரை அறுக்கப் பயன்படுத்திய வாள் இன்னும் துருப் பிடித்துப்போகவில்லை. அந்த வாளை நாங்கள் அரபிக்கடலில் வீசி விடவில்லை’’ என்று முழக்கமிட்டுள்ளனர்.
ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட இந்த கொலை வெறி முழக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குப் பெருத்த சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் ஊர்வலத்தை முன்னின்று நடத்திய உள்ளூர் தலைவரைக் கம்யூனிஸ்ட் மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
– பா. பாரதி