காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணம் மற்றும் பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில், அரசு அலவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்கு தனியார்நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் தரப்பில் இலவசமாக பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று (அக்டோபர் 24) மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.,
அப்போது பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அலுவலக ஊழியர்கள், வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்திற்கு வந்த பயனாளிகள் சிலர் என பலரிம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கணக்கில் வராத பணம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த பட்டாசு பெட்டிகள், இனிப்புகளையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனைன்போது, அருகே நடமாடி வந்த புரோக்கர்கள் திடிரென தலைமறைவான நிலையில், அருகில் செயல்பட்டு வந்த ஜெராக்ஸ் கடை, பெட்டிக்கடை, ஸ்டேஷனரி கடை உள்ளிட்ட பல கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.