சென்னை: சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர்  நேற்று மாலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை யின்போது, கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை உள்பட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை மெரினா கடற்கரை அருகே சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் கடல் அரிப்பு தடுப்பு பிரிவின் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்திற்கு நேற்று மாலை திடீரென வந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.  ஒப்பந்ததாரகளின் உரிமம் புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது.  இந்த சோதனையின்போது, ரூ.2.14 லட்சம் கணக்கில் காட்டப்படாத தொகை கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது.  இதனை தொடர்ந்து நீர்வளத்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் எழிலகம் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.