தசரா திருவிழா இந்த ஆண்டு வழக்கமான 10 நாட்கள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக 11 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைசூரில் கி.பி 1399 இல் விஜயநகரப் பேரரசின் போது தொடங்கிய தசரா திருவிழா கி.பி 1410 முதல் மைசூர் உடையார்கள் மூலம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அப்போதிருந்து, தசரா அரச பாரம்பரியம் மற்றும் கலாச்சார சிறப்பின் ஒரு காட்சியாகவே உள்ளது.

‘பஞ்சாங்கம்’ மற்றும் தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட பாரம்பரிய நூல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் தசரா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, பஞ்சாங்கத்தின்படி, பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் 11 நாட்கள் விழாவை நடத்தும் என்று கூறப்படுகிறது.

தசரா திருவிழாவின் முக்கிய நாளான பஞ்சமி திதி, பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு தேதிகளில் வருகிறது.

இதையடுத்து இந்த ஆண்டு தசரா திருவிழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மைசூரு அரண்மனை வாரிசுகள் மற்றும் புரோகிதர்கள் மேற்கொண்ட ஆலோசனையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், கர்நாடக மாநிலத்தில் தசரா திருவிழாவின் போது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான விடுமுறை குறித்து முதல்வர் சித்தராமையா முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

இம்மாதம் 26ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.