டில்லி
நாட்டை துண்டாக்கும் துரியோதனனும் துச்சாதனனும் பாஜகவில் உள்ளனர் என முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நடைபெறும் போராட்டம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாஜகவினர் கடுமையாகச் சாடி கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை துண்டாக்க முயலுபவர்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த வியாழன் அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்விதம் நாட்டை துண்டாக்க முயல்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மற்றொரு அமைச்சரான கிரிராஜ் சிங், “முகலாயர்களும் ஆங்கிலேயரும் நாட்டை துண்டாக்க நினைத்தும் முடியாததை ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் அசாதுதீன் ஓவைசிய் ஆகியோர் முயல்கின்றனர். அவர்கள் உள்நாட்டுப் போரை உருவாக்க நினைக்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் பாஜக அமைச்சரான யஷ்வந்த் சின்கா தனது டிவிட்டரில், “நாட்டை துண்டாக்கும் பயங்கர கும்பலில் துரியோதனன் மற்றும் துச்சாதனன் என இருவர் உள்ளனர். அவர்கள் இருவரும் பாஜகவில் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருங்கள்” என பதிந்துள்ளார்.
ஏற்கனவே பிரபல சரித்திர ஆர்வலர் ராமச்சந்திர குகா நாட்டை துண்டாடுபவர்கள் மத்திய ஆட்சியாளராக டில்லியில் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.