சென்னை: நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தை கருணாநிதி சிலை வைத்தது மட்டும் தான் என விமர்சித்துள்ள பாஜக பிரமுகர் அண்ணாமலை, திமுக அரசு சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் திரு @mkstalin சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான்.
இவ்வாறு கூறி உள்ளார்.
