‘’ உ.பி. மாணவர்களுக்கு மட்டும் கொம்பு முளைச்சுருக்கா என்ன?’’
உத்தரப்பிரதேசம், பீகார். ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக டெல்லியில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இதே மாநிலத்து ஆட்கள் மும்பையிலும் பசி-பட்டினி என்று தெரு ஓரங்களில் நாட்களை ஓட்டுகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்ப’ ஊரடங்கு’’தடையாக உள்ளது.
ஆனால் , ராஜஸ்தானில் சிக்கியுள்ள உத்தரப்பிரதேச மாணவர்களிடம் மட்டும், தனிக்கருணை காட்டியுள்ளது, அந்த மாநில பா.ஜ.க. அரசாங்கம்.
உ.பி.மாணவர்கள் சுமார் 7,500 பேர் ராஜஸ்தான் மாநிலம் ’கோடா நகரில்’ போட்டி தேர்வுகளுக்கான ‘கோச்சிங் செண்டரில்’ படித்து வருகிறார்கள்.
அவர்கள், அங்கே ’’அசவுகரியமாக’’ உள்ளதாக உ.பி.மாநில, பா.ஜ.க.முதல் –அமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு சொல்லப்பட்டது.
துடித்துப்போனார், யோகி.
உ.பி.யில் இருந்து சுமார் 300 ‘ஸ்பெஷல்’ பேருந்துகளை அனுப்பி , ராஜஸ்தானில் இருந்து, தங்கள் மாநில மாணவர்களை அழைத்து வர ஆர்டர் போட்டுள்ளார், யோகி.
‘ வெவ்வேறு நகர்களில் அப்பாவி தொழிலாளர்கள், சோறு இல்லாமல் குற்றுயிரும் , கொலை உயிருமாக வாடி வதங்கிக் கிடக்கும் நிலையில் உ.பி.மாணவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு அனுமதி?’’’
என்று நாட்டின் நாலா புறங்களில் இருந்தும் கண்டன கணைகள் எழுந்துள்ளன.
பா.ஜ.க.கூட்டணியில் உள்ள பீகார் முதல் –அமைச்சர் நிதிஷ்குமாரிடம் இருந்தே முதல், அம்பு பாய்ந்துள்ளது.
‘’ உ.பி.மாணவர்களுக்கு மட்டும் தனிச்சலுகை காட்டுவது, பெரும் அநீதி’’ என்று காட்டமாகவே விமர்சனம் செய்துள்ளார், நிதீஷ்.
‘’ தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குப் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறீர்கள். ஆனால் வேறு சிலருக்கு மட்டும் சலுகையா?’ என்று மத்திய அரசை விளாசுகிறார், நிதீஷின் நெருக்கமான சகா ஒருவர்,
‘’சட்டம் அவர்கள் கையில் . வளைப்பார்கள்.. நொடிப்பார்கள். யார் கேள்வி கேட்க முடியும்?’’ என்கிறார்கள், வெளி ஊர்களில் தவிக்கும் அப்பாவி தொழிலாளர்கள்.
– ஏழுமலை வெங்கடேசன்