டில்லி
பாலகோட் தாக்குதலின் போது மேக மூட்டத்தில் விமானங்களை ராடார் கண்டுபிடிக்காது என பிரதமர் மோடி கூறியதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலப்படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. இந்த சர்ச்சை முடிவதற்குள் மற்றொரு சர்ச்சை தொடங்கி உள்ளது.
சமீபத்தில் மோடி ஒரு ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், “பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9-9.30 மனி வாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டு இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன்.
எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது. தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது,
நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன்.
இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனல் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள்” என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பேட்டி வெளியான கடந்த சனிக்கிழமை தேசிய தொழில்நுட்ப தினம் ஆகும்..
பேட்டியின் இந்த பகுதி டிவிட்டரில் பாஜகவின் பக்கத்தில் வெளியாகி இருந்ததது. ஆனால் அந்த பதிவு சில நேரத்தில் நீக்கப்பட்டு விட்டது. இந்த பதிவு நீக்கம் குறித்து பாஜக ஐ டி விங் தலைவர் அமித் மாளவியா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். மோடியின் இந்த பேட்டிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ”மோடியின் இந்த பேட்டி அவரது அறியாமையை காட்டுவது மட்டுமின்றி இந்திய விமானப்படையை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் மற்றவர்களை தேசத்துக்கு எதிரானவர் என குறிப்பிடுகிறார். ஆனால் நாட்டை பாதுகாக்கும் படையினரை ஒன்றும் தெரியாதவர்களாக சித்தரிப்பதும் தேசத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்” என தெரிவித்துள்ளார்
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சல்மன் சோஸ் தனது டிவிட்டரில், “ராடார் எவ்வாறு பணி புரிகிறது என்பதை யாரும் பிரதமருக்கு விளகக்வில்லை என தெரிய வந்துள்ளது. இது உண்மை என்றால் இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் சவாலான விஷயமாகும். இது நகைச்சுவையான விஷயம் அல்ல.” என பதிந்துள்ளார்.