பெங்களூரு

பெங்களூரு நகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் மென்பொருள் உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால், அதனைப் பயன்படுத்தி வந்தவர்கள் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மக்கள் குடிக்க, கைகழுவக் கூட தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்கிறார்கள்.

நகரில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார்ப் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டதுடன் அங்குப் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தச் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

நகரின் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு சாலைகளில் தண்ணீர் டேங்கர் லாரிகள் அதிகளவில் தென்படுகின்றன. முன்பு தண்ணீர் டேங்கர் கட்டணம் ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.