சென்னை; திமுக அரசு மற்றும் அமைச்சர் நாசரின் திறமையின்மையால், ஆவின் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஆவின் நிறுவனம் அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை கடந்த 22 மாதங்களாக ஆவின் நிறுவனத்தில் நிலவுகிறது. தமிழக மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத நிலை நிலவுகிறது.
தி.மு.க.அரசின் செயல்பாட்டினைப் பார்க்கும்போது, ‘கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன்; வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன்’ என்ற பழமொழிதான் மக்களின் நினைவிற்கு வருகிறது. ஆவின் நிறுவனம் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்வதற்குப் பதிலாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டு.
தி.மு.க.அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, பால் மற்றும் அதன் உப பொருட்கள் விநியோகத்தை குறைப்பது, பால் விலையினை அவ்வப்போது உயர்த்துவது, உப பொருட்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் ஆகியவற்றின் விலையினை அடிக்கடி உயர்த்துவது, எடைக் குறைப்பு என பல்வேறு குளறுபடிகளை ஆவின் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. அண்மைக் காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 14லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 10லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக அட்டைதாரர்களுக்கு மட்டுமே பால் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், காலதாமதமாக சென்றால் அவர்களுக்கும் கிடைப்பதில்லை என்றும், சில்லறை விலையில் ஆவின் பால் பாக்கெட்டினை வாங்குவது என்பது ஏழையெளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது மட்டுமல்லாமல், கடந்த பத்து நாட்களாக எந்த ஆவின் பாலகத்திலும் வெண்ணெய் இருப்பு இல்லை என்ற நிலைமை இருந்து வருகிறது. பாதாம் பவுடரை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டதாக ஆவின் பாலக உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பாலினை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதே நிலைமைதான் வெண்ணெய், நெய் மற்றும் இதர பொருட்களை வாங்குவதிலும் நீடிக்கிறது. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கு காரணமாக, கூடுதல் சுமைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளார்கள். ஓப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு முன்கூட்டியே தி.மு.க. அரசு தீர்வு கண்டிருந்தால், பால் பற்றாக்குறை என்ற பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. எனவே இந்த நிலைமைக்குக் காரணம், தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குதான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆவின் நிர்வாக இயக்குநரோ இப்பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார். ஒவ்வொரு முறை பிரச்சினை வரும்போதும், இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படு கின்றன. ஆனால் பிரச்சினைகள் தொடர்கின்றன. ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி குறித்து அவ்வப்போது பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகள் குறித்து நானும் பல அறிக்கைகளை அவ்வப்போது விடுத்து வருகிறேன். இருப்பினும், நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் செல்கிறதே தவிர, எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆவின் நிறுவனத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளது. எனவே, முதல்வர், ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்து உடனடியாக ஓர் ஆய்வினை மேற்கொண்டு, அங்கு நிலவும் அனைத்து குழப்பங்களை தீர்க்கவும், ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்”.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.