டில்லி

ஸ்டெர்லைட் ஆலை மூடலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தாமிர ஏற்றுமதியாளராக இருந்த இந்தியா 90% இறக்குமதியாளராக மாறி உள்ளது.

தூத்துக்குடியில் அமைந்திருந்த வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தியாவின் தாமிர உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தது    இந்த தொழிற்சாலையால் சுற்றுச் சூழல் மாசடைவதாக எழுந்த  போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர்.  இதையொட்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.    இந்த ஆலையை மீண்டும் தொடங்க வேதாந்தா குழுமம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயன்று வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது இந்தியாவில் இருந்து தாமிரம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.   தற்போது இந்தியத் தேவையில் பெரும்பங்கை அளித்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடலால் கடந்த ஒன்றவை ஆண்டுகளில் தாமிரத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இப்போது இந்தியத் தேவையில் 90% தாமிரம் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது.

தாமிர ஏற்றுமதியாளராக இருந்த இந்தியாவில் முதன் முதலில் இறக்குமதியாளராக மாறும் நிலை கடந்த நிதியாண்டில் ஏற்பட்டது.     முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தாமிர இறக்குமதியானது 131.2% அதிகரித்துள்ளது.   முன்பு சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தைச் சீனா, தைவான், மலேசியா, தென்கொரியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்து வந்த இந்தியா சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை ஜப்பான், காங்கோ, சிங்கப்பூர், சிலி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தற்போது இறக்குமதி செய்து வருகிறது.