மும்பை
ஒரே நாளில் இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகள் விலை சரிவால் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலகெங்கும் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது இந்தியப் பங்குச் சங்தையிலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 37,577 புள்ளிகளில் முடிவடைந்தது. திங்களன்று பங்குகள் கடுமையாக விலை சரிந்ததால் அது 35,104 ஐ அடைந்தது.
இந்த வாரத்தில் இன்று இரண்டாம் முறையாகப் பங்குகள் விலையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று சென்செக்ஸ் 32539 ஆகி கடந்த 4 நாட்களில் 5000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொழில்துறை முடங்கி உள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் இந்தியாவில் யெஸ் வங்கி விவகாரமும் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து சென்செக்ஸ் 32539 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி இன்று 924 புள்ளிகள் சரிந்து 9532 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி ஆகும். இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.