நெல்லை

தொடர்மழை காரணமாக நெல்லையில் பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழைல் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு சுமார் 21 ஆயிரத்திற்கும் மேல் கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதியளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் நீர் வெளியேற்றம் குறைவாக காணப்பட்டு வருகிறது.

இங்கு பெய்த கனமழை காரணமாக ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று அருவியே தெரியாத அளவுக்கு தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. ஆண்டு தோறும் பாபநாசம் அனவன்குடியிருப்பு பகுதியில் பொங்கல் திருவிழாவிற்காக சுமார் 80 முதல் 100 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிடுவார்கள்.  அதன்படி கரும்பு பயிரிட்டு 9 மாதங்களாகி பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருந்தது.

கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அனவன் குடியிருப்பு அருகே உள்ள சிங்கபெருமாள் குளம் உடைப்பு மற்றும் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் உடைப்பினால் மழைநீர் கரும்பு பயிரிட்ட விவசாய நிலத்தில் புகுந்தது. எனவே சுமார் 20 ஏக்கரில் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

மேலும் சேரன்மகாதேவி தாலுகாவிற்கு உட்பட்ட உதயமார்த்தாண்டபுரம், சக்திகுளம், கூலியூர், சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.