கத்வால்
தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பெட்ரோல் விலை உயர்வால் குதிரை வாங்கி சவாரி செய்யத் தொடங்கி உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கத்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள முலகல பள்ளி என்னும் ஊரில் குர்ரம் நரசிம்மா என்னும் விவசாயி வசித்து வருகிறார். தனது போக்குவரத்துக்கு இவர் பைக்கை பயன்படுத்தி வந்தார். தற்போது பெட்ரோல் விலை தினசரி உயர்ந்து வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்றுள்ளது. இவருக்குத் தினசரி பெட்ரோலுக்கு செலவு செய்வது கட்டுப்படி ஆகவில்லை
எனவே குர்ரம் நரசிம்மா தனது பைக்கை ரூ.22000க்கு விற்பனை செய்து அந்த பணத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது உறவினர் மூலம் ஒரு குதிரை வாங்கி உள்ளார். இப்போது தினமும் விவசாய நிலங்கள் மற்றும் வெளியூர்களுக்குக் குதிரையில் பயணம் செய்து வருகிறார். அந்தப் பகுதியில் இது பரபரப்பாகி உள்ளது.
குர்ரம் நரசிம்மா இது குறித்து, “எனக்குச் சிறுவயதிலிருந்தே குதிரை சவாரி செய்ய ஆசை இருந்தாலும் பைக்கை பயன்படுத்தி வந்தேன். மாதம் ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவு ஆவதால் நான் பைக்கை விற்று குதிரை வாங்கி எனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன். எனது நிலத்திலேயே குதிரையை மேய்ச்சலுக்கு விடுவதால் பெட்ரோல் செலவு முழுவதும் குறைந்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.