டில்லி
எதிர்க்கட்சிகளை ஓரம் கட்டுவதாக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக ராகுல் காந்தியிடம் பேட்டி அளிக்குமாறு தூர்தர்ஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு அரசின் பிரசார் பாரதி அமைப்பின் கீழ் வரும் தூர்தர்ஷன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரஹ்மர் மோடியின் நானும் காவலன் என்னும் பிரசார கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தனர். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு தொலைக்காட்சி ஊடகம் ஆளும் கட்சிக்கு மட்டுமே சாதகமாக நடந்துக் கொள்வதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜி வாலா தெரிவித்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் பிரசார் பாரதி அமைப்புக்கு அனுப்பிய கடிதங்களில் அனைத்து கட்சிகளுக்கு சமமான அளவு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் தற்போது தூர்தர்ஷன், ஆல் இண்டியா ரேடியோ உள்ளிட்ட அமைப்புக்கள் அது போல நடந்துக் கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க தூர்தர்ஷனுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆணயம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதை ஒட்டி அமைச்சகம் பிரசார் பாரதி அமைப்பு அதிகாரிகளை சந்தித்து இது குறித்து வலியுறுத்தியது. அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறாத வகையில் அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என டிடி நியூஸ் உள்ளிட்ட சேனல்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி தூர்தர்ஷன் ஆளும் கட்சிக்கு மட்டும் ஆதரவாக நடப்பதாக பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை ஒட்டி தூர்தர்ஷன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தங்களுக்கு பேட்டி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தூர்தர்ஷன் பேட்டி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள முதல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகும். அத்துடன் தூர்தர்ஷனின் மாநில பிரிவுகள் அந்தந்த மாநில முதல்வர்களிடமும் எதிர்கட்சி தலைவர்களிடமும் பேட்டி காண உள்ளதாக கூறப்படுகிறது.