மோடியின் பிடிவாதத்தால் வட கிழக்கு மாநிலங்களில் நொறுங்கும் பா.ஜ.க. கூட்டணி…
— பாப்பாங்குளம் பாரதி

ண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஷ்கர் ஆகிய கோட்டைகளை காங்கிரசிடம் பறி கொடுத்த பா.ஜ.க.வுக்கு ,இந்திய வரைபடத்தின் உச்சியில் இருக்கும் சில மாநிலங்கள் ஆறுதலாய் இருந்தன.

அவை-

வட கிழக்கு மாநிலங்கள் என்று அழைக்கப்படும் அசாம்,அருணாச்சல பிரதேசம்,நாகலாந்து,மணிப்பூர்,மேகாலயா,மிசோரம்,மற்றும் திரிபுரா.
ஒரு காலத்தில் இந்த பிராந்தியங்கள் காங்கிரசின் அரண்களாக இருந்தவை.இன்று மருந்துக்கு கூட அங்கு ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இல்லை.

பா.ஜ.க.வின் தேர்தல் தந்திரமே அதற்கு காரணம்.மற்ற மாநிலங்களில் சில தோழமை கட்சிகளை சேர்த்துக்கொண்டு ‘ தேசிய ஜனநாயக கூட்டணி ’ என்ற பேனரில் செயல்படும் பா.ஜ.க.இந்த வட கிழக்கு மாநிலங்களில் உள்ளூர் கட்சிகளை அரவணைத்து ‘வட கிழக்கு ஜனநாயக முன்னணி’ என்ற குடையின் கீழ் ஆட்சி பரிபாலனம் செய்து வருகிறது.’’நேடா’’என்று இந்த கூட்டணியை சுருங்க அழைக்கிறார்கள்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. தன் சொந்த பலத்தில் ஆட்சி நடத்துகிறது. மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் பங்கு அல்லது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி என்ற ரீதியில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டம் – நேடா முன்னணியின் குடையை கிழித்து சிதைக்க ஆரம்பித்துள்ளது.

மத துவேஷம் காரணமாக –அடிபட்டு ,மிதிபட்டு பங்களாதேஷ் உள்ளிட அண்டை நாடுகளில் இருந்து ஓடி வந்துள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு –இந்திய குடிஉரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இவ்வாறு வந்துள்ள அகதிகள் வட கிழக்கு மாநிலங்களில் தான் விரவி கிடக்கிறார்கள்.அவர்களுக்கு குடி உரிமை கொடுத்தால் தங்கள் சோற்றில் மண் விழுந்து விடும் என அங்குள்ள பூர்வ குடிகள் சங்கொலி எழுப்ப-அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளன –‘நேடா’ முன்னணி கட்சிகள்.

திருத்திய சட்டத்தை மாற்ற முடியாது என மோடி அரசு ஒற்றைக்காலில் நிற்க –‘’நாட்டாம ….தீர்ப்ப மாத்து’’ என நேடாவில் அங்கம் வகிக்கும் உறுப்பு கட்சிகள் உறும ஆரம்பித்து விட்டன.

மத்திய அரசின் பிடிவாதப்போக்கை கண்டித்து அசாம் பா.ஜ.க.கூட்டணி அரசில் அங்கம் வகித்த அசாம் கன பரிஷத் ,20 நாட்களுக்கு முன் விலகி விட்டது.
அடுத்த கட்டமாக –மோடி அரசுக்கு எதிராக –‘நேடா’’ கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்ட ஆரம்பித்து விட்டார் அசாம் கனபரிஷத் தலைவர் அதுல் போரா.

முதலில் அவர் சென்றது மேகாலயாவுக்கு.அங்கு ‘நேடா’ கூட்டணியின் பிரதான கட்சியான தேசிய மக்கள் கட்சி ஆட்சியில் உள்ளது.சங்மா முதல்வராக இருக்கிறார்.
போராவின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சங்மா உறுதி அளிக்க –உற்சாகமான போரா அடுத்த வாரம் மிசோரம் போகிறார்.

அங்கும் நேடாவின் மற்றொரு கூட்டாளியான மிசோரம் தேசிய முன்னணி தலைவர் சோரம் தங்கா முதல்வராக இருக்கிறார்.

அவரும் மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வருவதால் –போராவுக்கு மிசோரமிலும் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது.
இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

குடி உரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாத பட்சத்தில் –வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.கூட்டணி உடைந்து- மக்களவை தேர்தலில் மோடிக்கு பெரும் இழப்பை கொடுக்கும் என்பதே கள நிலவரம்.-

— பாப்பாங்குளம் பாரதி