குறைந்துபோன நன்கொடைகள்.. கதி கலங்கும் தொண்டு நிறுவனங்கள்…
இந்த கொரோனா ஊரடங்கின் பாதிப்பிற்கு பொதுச் சேவைகள் செய்து வரும் சேவை மையங்களும் தப்பவில்லை. பெரிய பெரிய கம்பெனிகள் சம்பளம் போன்றவற்றில் சிக்கனம் காட்டுவது போல, இவர்களும் மருத்துவ உதவி மற்றும் தினசரி உணவு போன்றவற்றில் கட்டுப்பாடுகள் காட்ட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டனர்.
கிராமப்பகுதிகளிலும் சேர்த்து வருடத்திற்கு 22 ஆயிரம் இலவச கண் அறுவை சிகிச்சை செய்யும் சங்கர நேத்ராலயா இதனை அப்படியே பாதியாக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்குவதாலும் செலவுகளைக் குறைக்க இருக்கின்றனர். இதன் நிர்வாக இயக்குனர் அகிலா கணேசன், “எங்களுக்கு ரெகுலரா வர வேண்டிய டொனேசன் அப்படியே பாதியா குறைஞ்சிட்டதால, இதைத் தவிர வேற வழி தெரியல. ஒருவேளை புதுசா நன்கொடைகள் கிடைச்சால் இந்த நிலை மாறலாம்” என்கிறார்.
மனநலம் சார்ந்த சேவை மையமான “பான்யன்” இயக்குனர் டாக்டர் கிஷோர் குமார், “இப்போ பண்ற சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட்ஸ்க்காக யோசிச்சா நாங்க சென்டரை ரொம்ப நாள் ஓட்ட முடியாது. எங்களுக்கு ரெகுலரா கார்பொரேட் நிறுவனங்களிலிருந்து வரும் நன்கொடை 40% குறைஞ்சிட்டதால, எங்களோட தினசரி மெனுவில் சில மாற்றங்கள் பண்ணியிருக்கோம்” என்று நிலைமையை விளக்குகிறார்.
தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையம் மற்றும் காக்கும் கரங்கள் போன்ற சில தொண்டு நிறுவனங்களும் இதனை உறுதி செய்கின்றனர். பெரிய நிறுவனங்கள், கார்பொரேட் கம்பெனிகள் இந்த தொற்று காலத்தில் எந்த வியாபார பரிமாற்றங்களும் இல்லாத சூழலில் சமூகப் பொறுப்பு செலவுக்கான (CSR) நிதி எதையும் இவர்களின் பட்ஜெட்டில் ஒதுக்க முடியாமல் போனதே இதற்கு காரணம் என்கின்றனர் Crisil Foundation, இவர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில். மேலும் பல நிறுவனங்கள் தங்களின் சமூக பொறுப்பு சார்ந்த செலவுத்தொகை அனைத்தையும் இந்த கொரோனாவுக்கா ஒதுக்கீடு செய்து விட்டதும் ஒரு முக்கிய காரணியாகும் என்கின்றனர் இந்த Crisil Foundation அமைப்பினர்.
– லெட்சுமி பிரியா