பெங்களூரு

ர்நாடகா மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதை ஒட்டி எதிர்க்கட்சியான பாஜக தனது உறுப்பினர்களை கண்காணித்து வருகிறது.

கர்நாடக மாநில காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசில் இருந்த 16 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் இந்த கூட்டணி பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. தங்கள் ராஜினாமா குறித்து முடிவெடுக்க கர்நாடக சபாநாயகரை வலியுறுத்தக் கோரி அதிருப்தி உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆயினும் சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த உறுப்பினர்கள் கட்சிக் கொரடாவின் கட்டுப்பாட்டின் கீழ் கிடையாது என்பதையும் சபாநாயகர் மறுத்துள்ளார். கர்நாடக மாநில ஆளுநர் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இரு கடிதங்கள் அனுப்பி உள்ளார். இதனால் நேற்று காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்க்ளிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை விட எதிர்க்கட்சியான பாஜக முகாமில் அதிக பரபரப்பு உண்டாகி இருக்கிறது.

நேற்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேறாமல் விஸ்வநாத் மற்றும் அஸ்வதநாராயணா ஆகிய உறுப்பினர்கள் கண்காணித்து வந்துள்ளனர். உணவு இடைவேளையின் போது எதிர்க்கட்சிக்கான உணவு அரங்கில் உறுப்பினர்கள் சென்று உணவு உண்டுவிட்டு பின்பு மீண்டும் அவைக்கு வரும் வரை அவர்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாஜக தலைவர் சோமண்னா தமது கட்சி எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.