டில்லி

ன்று நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை ஒட்டி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்துள்ளார்.

டில்லி யூனியன் பிரதேசமாக உள்ளதால் அம்மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் இல்லாத நிலை உள்ளது. அம்மாநில துணை நிலை ஆளுநருக்கு அதிகாரங்கள் நிறைய உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறை கூறி வருகிறார். பல நல திட்டங்களை அவரால் நிறவேற்ற முடியாமல் பாஜக அரசு தடை செய்வதாகவும் அவர் தெரிவித்து வருகிறார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் 12 விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் தாக்குதல் நிகழ்த்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்க முகாம்கள் அடியோடு அழிக்கபட்டுள்ளன.  இதற்கு பாகிஸ்தான் அரசு பதிலடி கொடுக்கலாம் எனவும் போர் அபாயம் உள்ளதாகவும் பலரும் அச்சம் எழுப்பி உள்ளனர்.

இந்த தாக்குதலை பாராட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தாக்குதலை ஒட்டி டில்லிக்கு மாநில அந்தஸ்து கோரி தாம் தடங்க இருந்த உண்ணாவிரதத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில், “இந்திய விமானப் படையின் வீரத் தாக்குதலுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த தாக்குதல் மூலம் நம்மால் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க முடியும் என்பது உறுதியானதால் நான் பெருமை அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மற்றொரு பதிவில் அரவிந்த் கெஜ்ரிவால், “தற்போதுள்ள இந்தியா – பாகிஸ்தான் நிலையை ஒட்டி நான் டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி தொடங்க இருந்த உண்ணாவிரதத்தை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளேன். நாம் அனைவரும் ஒரே நாடு என்பது தற்போது முக்கியமானது” என பதிந்துள்ளார்.