திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக இரு தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டல பகுதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதையொட்டி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அடுத்த 2 நாட்கள் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பந்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குத் செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொல்லம், ஆலப்புழா, பந்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கூடு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குச் புதன்கிழமை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை எதிரொலி காரணமாகக் கொச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.