குருகிராம்
சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த வாகன சோதனையில் ரூ.1.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாளை அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நேற்று தேர்தல் பிரசார இறுதி நாள் ஆகும். இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் நேற்று வரை கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மாநிலமெங்கும் வாகன சோதனைகள் நடைபெறுகின்றன. இதுவரை அரியானாவில் தேர்தலை வருமான வரி துறை, காவல் துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மதுபானம், போதைப் பொருட்கள் மற்றும் ரூ.23 கோடியே 52 லட்சத்து 13 ஆயிரத்து 408 மதிப்பிலான சட்டவிரோத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன
நேற்று குருகிராம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் கார் ஒன்றைத் தடுத்து நிறுத்தினர். அந்த காரில் நடத்திய சோதனையில் ரூ.1.33 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அரியானா மாநிலத்தில் இதுவே இம்முறை கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய தொகையாகும்.