சோபூர், காஷ்மீர்
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது நடந்த கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பதட்டம் குறைந்து வருவதால் மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக விலக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீர் மாநிலத்தைப் பார்வையிட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு இன்று செல்ல உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஒரு வன்முறை சம்பவம் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த சோபூர் நகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நேற்று பயணிகள் காத்திருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் பொதுமக்களில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த 20 பேரில், 6 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இவர்கள் ஸ்ரீநகரில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மீதமுள்ளவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோபூர் நகருக்குள் வந்து கையெறிகுண்டுகளை வீசிய தீவிரவாதிகளைப் பிடிக்கப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.