டில்லி
இந்தியாவில் கொரோனாவால் கடும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பலர் பழைய தங்க நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் நாடெங்கும் பலர் வேலை இழந்ததால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை என்னும் அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இரண்டாம் அலை கொரோனாவில் இது அதிகம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் தங்கள் தேவைக்காக வெகுநாட்களாக குடும்பத்தில் உள்ள புராதன தங்க நகைகளை விற்றுள்ளனர். சென்ற வருடம் பால் ஃபெர்னாண்டஸ் என்னும் ஓட்டல் சர்வர் தனது குழந்தைகள் படிப்புச் செலவுக்காகத் தனது குடும்ப நகையை அடகு வைத்திருந்தார். தற்போது அவர் அதே நகையை விற்பனை செய்துள்ளார். வருமானம் மீண்டும் எப்போது வரும் எனத் தெரியாத நிலை உள்ளதால் நகையை விற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா தொற்று காலத்தில் 215 டன்கள் பழைய நகைகள் விற்பனை செய்யப் பட்டு உருக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களில் இது மிகவும் அதிகமாகும். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் இந்தியாவில் தற்போது இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் சராசரி குறைந்த தினசரி வருமானம் கூட கிடைக்காத நிலையில் 20 கோடி பேர் உள்ளதே ஆகும் என கூறப்படுகிறது.