பீஜிங்
கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. அது சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் பரவி உள்ளது. இதனால் சீனாவில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பல நாடுகளிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் உலக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனங்கள் முழுமையாக பணிகளை இழந்துள்ளன. இந்நிறுவனங்கள் ஊதிய உயர்வு, செலவுக் குறைப்பு, உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சுற்றுலா இந்த வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.
இத்தாலி, தென்கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் வெளிநாட்டினர் தங்கள் நாட்டில் பயணம் செய்வதற்குத் தடை விதித்துள்ளது. இதனால் பலர் அந்த நாட்டின் விசா மற்றும் விமான டிக்கட்டுகளை ரத்து செய்துள்ளனர். இதனால் விமான போக்குவரத்து சேவைகளும் பல நாடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரபல சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நிறுவனத்தின் பங்குகளும் இறங்குமுகத்தில் காணப்படுகிறன. அக்பர் குழுமம் தற்போதைக்கு புதிய ஆட்களைப் பணி நியமிப்பதை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா நிறுவனங்கள் 3000 ஊழியருக்கு லே ஆஃப் அறிவித்துள்ளன.
சர்வதேச விமான் போக்குவரத்து சங்கம் இதனால் 300 கோடி டாலர் அளவுக்கு விமான நிறுவனங்கள் வருமானம் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. வருமானக் குறைவால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் ஊதியத்தில் 5-15% வரை குறைத்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமில்லா விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.