கொல்கத்தா

கொரோனா பரவுதல் காரணமாக இந்த வருடம் துர்கா பூஜை திருவிழா நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் இதுவரை 58.16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதில் 92.3 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2.38 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 4,606 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி முதல் இங்கு துர்கா பூஜை விழா தொடங்க உள்ளது.

நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”கொரோனா காரணமாக இந்த வருடம் துர்கா பூஜை திருவிழா நடத்தப் போவதில்லை.   வரும் அக்டோபர் மாதம் 22 முதல் அமைக்கப்படும் அனைத்து பந்தல்களும் நான்கு பக்கமும் திறந்து இருக்க வேண்டும்.   நான்கு புறமும் கை சுத்திகரிப்பான் (Hand sanitizer) வைத்திருக்க வேண்டும்.  பந்தலுக்குள் முகக் கவசம் அணியாதோரை அனுமதிக்கக் கூடாது.   சமூக இடைவெளி அவசியமாகும்.

எந்த ஒரு பகுதி மக்களோ அல்லது சங்கங்களோ துர்கா பூஜை பந்தல்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை இந்த வருடம் நடத்தக் கூடாது.   ஒவ்வொரு துர்கா பூஜைக் குழுவுக்கும் அரசு சார்பில் ரூ.50,000 நிதி உதவி அளிக்கப்படும்.  அதைப் போல் 80000 தெரு வர்த்தகர்களுக்கு துர்கா பூஜை தொடங்கும் முன்பு ரூ.2,000 நிதி உதவி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.