ஜம்மு :
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நாடுகளில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயிலுக்கும் (மாதா வைஷ்ணவி தேவி என்றும் அழைப்பார்கள்) பக்தர்கள் வருவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் அரசு இன்று பிறப்பித்த உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வசந்த நவராத்திரியை முன்னிட்டு மார்ச் 25 முதல் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு வரவிருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதியைக் கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது.
வசந்த நவராத்திரியின் போது வைஷ்ணோ தேவி கோயிலுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய சூழ்நிலையில், நாடு முழுவதிலுமிருந்து வரும் பயணிகளின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அவர்களின் பயணத்தை ஒத்திவைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளையும் தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் பான் கங்கா சோதனைச் சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்ய பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஆலய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர, யாத்திரை செல்லும் பாதையில் உள்ள ஆலய வாரியத்தின் அனைத்து மருந்தகங்களிலும் முன்னெச்சரிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தடை உத்தரவால், வசந்த நவராத்திரிக்கு வருகை தர எண்ணியிருந்த சுற்றுலாப் பயணிகள் சற்று ஏமாற்றமடையக்கூடும். இது தவிர, வசந்த நவராத்திரியின் போது பயண தடை விதிக்கப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, வசந்த நவராத்திரியின் போது வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர்.