திருவனந்தபுரம்

கேரள அரசு அனுமதி அளித்தும் கொரோனா அச்சம் காரணமாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் ஜும்மா மசூதி திறக்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போதைய ஊரடங்கில் பல விதிகளை ஆங்காங்கு உள்ள நிலையைப் பொறுத்துத் தளர்வு செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  அவ்வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் எட்டாம் தேதி முதல்  வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளார்.

மேலும் அதற்கு சில கட்டுப்பாடு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்கும் நிலையில் இது போன்ற அறிவிப்பு அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத் தலைநகரும் காங்கிரஸ் முத்த தலைவர் சசிதரூரின் நாடாளுமன்றத் தொகுதியுமான திருவனந்தபுரத்தில் பாளையம் ஜும்மா மசூதி என்னும் புகழ்பெற்ற மசூதி அமைந்துள்ளது.  இந்த மசூதி கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திறக்கப்பட மாட்டாது என மசூதியின் நிர்வாகி அறிவித்துள்ளார்.