கொரோனா பீதியால் உயிர் இழந்த குழந்தையைக் கால்வாயில் வீசிய தந்தை..
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொடப்பாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த மதார் பீ என்ற பெண் நந்தியாலில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையிலேயே குழந்தை உயிர் இழந்ததால், அதனை எடுத்துக்கொண்டு மதார் பீ, தனது கணவன் ஷம்சா வாலியுடன் கிராமத்துக்குப் புறப்பட்டார்.
கிளம்பும்போது, ஷம்சா வாலி,ஊராருக்கு போன் செய்து குழந்தையைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்.
அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று அஞ்சிய கிராமத்தினர், குழந்தை சடலத்தை ஊருக்குள் கொண்டு வரக்கூடாது எனக் கூறிவிட்டனர்.
செய்வதறியாது திகைத்த ஷம்சா வாலி, மனதைக் கல்லாக்கிக்கொண்டு, வழியில் உள்ள கால்வாயில் குழந்தையைத் தூக்கி வீசி விட்டு வந்துள்ளார்.
கால்வாயில் குழந்தை சடலம் மிதந்து வருவது குறித்து அந்த பகுதி மக்கள் நந்தியால் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த போலீஸ், குழந்தையை மீட்டனர். குழந்தையின் உடலில் கட்டப்பட்டிருந்த மருத்துவமனை பட்டையை வைத்து, ஷம்சா வாலியின் முகவரியைக் கண்டு பிடித்த போலீசார், குழந்தை சடலத்துடன் அங்குச் சென்றனர்.
கிராமத்து மக்களைச் சமாதானம் செய்து, ஊர் மயானத்தில் குழந்தையைத் தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
-பா.பாரதி.