பெங்களூரு

பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை கிளைகளில் லே ஆஃப் காரணமாக 18000 தொழிலாளர்கள் பணி இழக்க உள்ளனர்.

கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதனால் பல நிறுவன ஊழியர்கள் பணி இழந்து வாடுகின்றனர்.   இந்நிலை தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகமாக காணப்படுகிறது.    பல ஐடி நிறுவனங்களுக்குப் பணி கிடைக்காததால் மூடும் நிலைக்கு வந்துள்ளன.  இந்நிலை பிரபல நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் பெங்களூரு கிளைகளில் கடந்த ஒன்று முதல் ஒன்றரை மாதங்களாக லே ஆஃப் அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் சுமார் 18000 ஊழியர்கள் பணி ஏதும் அளிக்கப்படாத நிலையில் உள்ளனர்.  இந்நிலையில் நிர்வாகம் தங்களால் புதிய பணிகளைப் பெற முடியாத நிலையில் உள்ளதால் இவர்களை ராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இது ஊழியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து கர்நாடக மாநில ஐடி ஊழியர் தொழிற்சங்கம், “காக்னிசண்ட் இவ்வாறு அதிக அளவில் லே ஆஃப் அறிவித்து நாடெங்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.  இதைக் கர்நாடக மாநில ஐடி ஊழியர் தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நாங்கள் காக்னிசண்ட் நிறுவன ஊழியர்கள் யாரும் தாங்களாக முன்வந்து ராஜினாமா செய்யக்கூடாது என ஒரு இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம்.   இவ்வாறு மொத்தமாக பணி நீக்கம் செய்வது தொழிலாளர் நலச் சட்ட மீறல் என்பதால் நாங்கள் இது குறித்து மாநில தொழிலாளர் நலத்துறைக்கு புகார் அளித்துள்ளோம்.

தொழிலாளர் நலச் சட்டத்தின்படி 100க்கு மேற்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தி உள்ள நிறுவனங்கள் லே ஆஃப் அளிக்கத் தொழிலாளர் நலத்துறையின் ஒப்புதல் பெற வேண்டும்.

ஊழியர்கள் தாங்களாகவே முன் வந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவிப்பது தவறாகும்  மாறாக அவர்கள் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுகின்றனர்.  இது சட்டத்துக்கு எதிரானது என்பதால் எங்கள் சங்கம் ஊழியர்களை ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி உள்ளது.” என அறிவித்துள்ளது.