டில்லி

அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மூத்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள்  அயோத்தி பூமி பூஜையில் கலந்துக் கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது

நாடெங்கும் கொரோனா தாக்குதல் காரணமாக மார்ச் 25 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  அதன்பிறகு கடந்த 2 மாதங்களாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   அவற்றில் ஒன்றாக மத கூட்டங்களுக்குப் பல சிறப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.    இந்த சிறப்பு விதிமுறைகளை உத்தரப்பிரதேச அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி அனுமதிக்கப்பட்ட மதக் கூட்டங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,  அனைவரும் முகக் கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று அயோத்தி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.  இதையொட்டி அயோத்தி நகருக்கு ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் நகர் முழுவதுமாக மூடப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி அன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்த விதிமுறைகளில் அனைத்து கல்வி நிலையங்கள், நீச்சல் குளங்கள், பார்கள், உண்வு விடுதிகள் மற்றும் கூட்ட அரங்குகளில்  நடைபெறும் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதிக அளவில் மக்கள் கூடும் சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சாரம், மற்றும் மதம் சம்பந்தமான அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது,

முக்கியமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள தளர்வுகளில் அனைத்து அனுமதிக்கப்பட்ட கூட்டங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றுடன் 65 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் எந்த ஒரு மத கூட்டத்திலும் பிரசாதங்கள் வழங்குவது,  பக்தர்கள் நெற்றியில் மற்றவர் திலகம் இடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் நடைபெற உள்ள பூமி பூஜையில் பிரதமர் மோடி, அத்வானி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பக்வத் உள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் அரசின் சிறப்பு விதிமுறைகளின் படி 65 வயதுக்கு மேற்பட்ட யாரும் பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளக் கூடாது என்பதால் இவர்கள் கலந்துக் கொள்வது சட்ட விரோதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.