ஜோகன்னஸ்பர்க்: டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் நிகழ்வையே நீக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று நொந்துபோய் கருத்து தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ்.
சமீபத்தில், இந்தியாவில் அந்த அணி பங்கேற்ற 3 டெஸ்ட் தொடர்களிலும் மோசமாக தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இந்த தோல்விக்கு, 3 போட்டிகளிலும் டூ பிளசிஸ் டாஸ் தோற்றதும் ஒரு காரணம். இதனால், அவர்களால் சரியான வியூகங்களை தேவையான நேரத்தில் வகுக்க முடியாமல் போனது. இந்திய அணியின் வியூகங்கள் அனைத்திற்கும் எளிதாக பலியானார்கள்.
கடைசி டெஸ்ட்டில், டாஸை வெல்வதற்காக, சக வீரர் பவுமாவை தன்னுடன்அழைத்து வந்தும்கூட, டூபிளசியால் டாஸை வெல்ல முடியவில்லை. இதுகுறித்து கூறியுள்ள டூ பிளசிஸ், “மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே காப்பி & பேஸ்ட் போல் ஒரே நிகழ்வாக இருந்தது. இதனால் நாங்கள் மனதளவில் மிகவும் சோர்ந்து போனோம்.
எனவே, இதைத் தவிர்க்க டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் நிகழ்வை நீக்கினால் சிறப்பாக இருக்கும். இதன்மூலம் அந்நிய மண்ணில் விளையாடும் அணியினர் சிறப்பாக செயல்பட வழியேற்படும். தென்னாப்பிரிக்க அணியினர் நெருக்கடியிலிருந்து மீண்டுவர, முன்னாள் வீரர்கள் தாராளமாக கருத்து தெரிவிக்கலாம்” என்றார்.