கனடா: தனது உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தடுக்க கனடாவின் அல்பர்ட்டா பகுதியில் இருக்கும் ஒரு உணவகம் ஒரு ருசிகர உத்தியை கையாண்டு வருகிறது.

original_oes

பவுலா என்ற பெண்மணி தனது கணவருடன் அல்பர்ட்டா,ஷெர்வுட்ஸ் பார்க்கில் இருக்கும் ஒரிஜினல் ஜோஸ் என்ற அந்த உணவகத்துக்கு வந்து அந்த உணவகத்தின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இரவு உணவுக்கு உண்டு, மது அருந்திவிட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்ட வேண்டாம் என்ற நோக்கில் காரை அந்த பார்க்கிங்கிலேயே விட்டு விட்டு வாடகை வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்றார்.
மறுநாள் தனது காரை திருப்பி எடுக்க அவர் அந்த உணவகத்தின் பார்க்கிங்குக்கு வந்தபோது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கிப்ட் கூப்பனுடன் ஒரு கடிதம் அவரது காரில் ஒட்டப்பட்டிருந்தது.

original_oes2

ஒரிஜினல் ஜோஸ் உணவகத்தின் அன்பு விருந்தினருக்கு,
தங்கள் வாகனத்தை எங்கள் பார்க்கிங்கில் இரவு விட்டுச் சென்றதற்காக நன்றி! தாங்கள் எங்கள் உணவகத்தில் மது அருந்தியிருந்தாலும் அருந்தாமலிருந்தாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் தவறை செய்யாமலிருந்ததற்காக நன்றி! இத்துடன் 1lb சிக்கன் விங்க்ஸுக்கான கிஃப்ட் வவுச்சரை இணைத்துள்ளோம். தாங்கள் பொறுப்புள்ளவராக இருந்ததற்கான நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாங்கள் தரும் சின்ன பரிசு இது. வாழ்க்கை விலைமதிப்பற்றது, இந்த வீக் எண்ட் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
என்ற ஒரு அருமையான கடிதம் ஒரிஜினல் ஜோஸ் உணவகத்தின் பங்குதாரர் ஜேய் மெக்லீன் என்பவரது கையெழுத்துடன் காணப்பட்டது. இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பவுலா இதை தனது முகநூலில் வெளியிட அந்தப் பதிவு கிட்டத்தட்ட 20,000 லைக்குகளையும் 8000 ஷேர்களையும் அள்ளியிருக்கிறது. பலரும் அந்த உணவகத்துக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.