திண்டுக்கல்: பள்ளிக்கு அருகிலேயே குட்கா, பான்மசாலா உள்பட போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், அந்த பகுதியில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகள்மீது, போதை பொருள் விற்பனை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவஹர் நகர்ப் பகுதியில் செயல்கபட்டு வரும் அரசு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதை வாங்கி மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்,
ஊரகப்பகுதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜஸ்டின் அமல்ராஜ் மற்றும் அவருடைய உதவியாளர் கருப்பசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்குள்ள கடையில் இருந்த புகையிலை குட்கா உள்பட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அப்பொழுது திடீரென கடையின் உரிமையாளர் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். உடன் சென்ற நபரையும் கீழே தள்ளி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, போதை பொருள் விற்பனை செய்தும், அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்