சென்னை: சென்னையில் போதைபொருட்கள் விற்பனை செய்த 3 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அந்த 3 ரவுடிகளை விடுவிக்கக் கோரி, ரவுடிகள் கும்பல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர். அங்கு பரபரப்பு நிலவியது.
தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை காவல்துறை கட்டுப்படுத்தி வருவதாக கூறினாலும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே இந்த நாசகார செயல்களில் ஈடுபட்டு வருவதால், போதை பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பல தரப்பினருக்கும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இநத் நிலையில், சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தொடர்பாக பிரபல ரவுடிகள், சைக்கோ சரண், போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் 3 பேர்களையும் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற ரவுடிகள் கும்பலாக வந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். 3 ரவுடிகளையும் விடுவிக்கக் கோரி வலியுறுத்திய நிலையில், அவர்களை விடுவிக்க காவல்துறையினர் மறுத்தனர். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் ராயப்பேட்டை மருத்துவமனையை அடித்துநொறுக்கினர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த கண்ணாடிகள், நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் கருவிகள், கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு அராஜகம் செய்துள்ளனர். இதில் மருத்துவ உபகரணங்கள், கண்ணாடிகள் ஆகியவை சேதமடைந்தது. மருத்துவமனையை ரவுடி கும்பல் அடித்து நொறுக்கியதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இருந்தது. பல நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு மருத்துவமனையில் அங்கும் இங்குமாக ஓடினர். பின்னர், இதனையடுத்து, ரவுடி கும்பலின் அராஜகம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், ரவுடிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். மருத்துவமனையை சூறையாடிய ரவுடிகளின் நண்பர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில தலைநகர் சென்னையிலேயே ரவுடி கும்பல்கள் காவலர்களை மிரட்டி, ரவுடிகளை விடுவிக்க வலியுறுத்தி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சம்பவம், காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் தமிழ்நாடு காவல்துறை செயலிழந்து விட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் ரவுடி கும்பலின் அராஜகம் தலைவிரித்தாடி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள்! டிஜிபி சங்கர் ஜிவால் ஓப்பன் டாக்…