சென்னை: மாநகர காவல் துறையில் டிரோன் காவல் பிரிவு உருவாக்கும் வகையில், தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நவீன காலத்திற்கேற்ப காவல்துறையையும் நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதையடுத்து, நவின முறையில் பாதுகாப்பு முறைகளை கண்காணிக்க சென்னை மாநகர காவல் துறையில் டிரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழை வெள்ள பாதிப்பு உள்பட, போராட்டங்கள், ஊர்வலங்களின்போது, காவல்துறையினர் டிரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இப்போது அதற்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னையில் ரூ.3.60 கோடியில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி கொடுத்துள்ளதாகவும், இதன்மூலம், கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் ட்ரோன் மூலம் கண்காணிக்க புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என கூறப்பட்டுள்ளது.