டில்லி:
500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து நாடு முழுதும் கடுமையான “நோட்டு பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளது.
பழைய பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ள மத்திய அரசு பலவித நிபந்தனைகளை விதித்திருக்கிறது. தவிர வங்கிகளில் போதிய பண நோட்டு இல்லாமை, ஏ.டி.எம்.கள் செயல்படமை போன்றவற்றால் மக்கள் செலவுக்கு செல்லத்தக்க நோட்டு இன்றி தவித்துவருகிறார்கள்.
முக்கியமாக வீட்டில் திருமணம் வைத்துள்ளவர்கள் பாடு படு திண்டாட்டமாக இருக்கிறது.
0
இந்த நிலையில்   திருமண வீட்டார் தகுந்த ஆவணங்களை காட்டி ரூ.2.50 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று பொருளாதாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது திருமண வீட்டார் பணம் எடுப்பது எப்படி என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
“திருமண வீட்டார் நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மட்டுமே எடுக்க முடியும். டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன் நடக்கும் திருமணத்துக்கு மட்டுமே பணம் எடுக்க முடியும்.
திருமண அழைப்பிதழ், மண்டப செலவு ரசீது, ஆகியவற்றை அளிக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே ரொக்கமாக பணம் வழங்கப்படும். பெற்றோர் அல்லது திருமணம் செய்யும் நபர் இவர்களில் ஒருவருக்கு மட்டுமே 2.50 லட்சம் வழங்கப்படும்.
பணம் எடுக்க விண்ணப்பிக்கும்போது மணமகன் மற்றும் மணமகள் பெயர்கள், அவர்களுக்கான அடையாள சான்றுகள், முகவரிகள் மற்றும் திருமண தேதியை குறிப்பிட வேண்டும்”   இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
(படம்: சமீபத்தில் தனது மகள் திருணத்தை 650 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செய்து முடித்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகள் மற்றும் மனைவியுடன்.)